பழுதடைந்த நிலையில் காணப்படும் கல்லூரி மாணவர் விடுதியை இடிக்க முடிவு
கோவையில் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் கல்லூரி மாணவர் விடுதியை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.;
கோவை
கோவையில் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் கல்லூரி மாணவர் விடுதியை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்பேத்கர் விடுதி
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கி உயர் கல்வி படிக்க வசதியாக கோவை பாலசுந்தரம் ரோட்டில் அம்பேத்கர் மாணவர் விடுதி கடந்த 1978-ம் ஆண்டு கட்டப்பட்டது. தரைத்தளத்துடன் கூடிய 2 மாடியில் மொத்தம் 45 அறைகள் உள்ளன.
இந்த விடுதியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். தற்போது கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் விடுதி மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர்.
இடித்து அகற்ற முடிவு
இந்த நிலையில் அந்த மாணவர் விடுதி மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அந்த விடுதியை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த விடுதி கட்டி 44 ஆண்டு ஆகிறது. தற்போது கட்டிட சுவர்களில் காங்கிரீட் பெயர்ந்து விழுந்து உள்ளது. எனவே பழைய விடுதி கட்டிடத்தின் அருகே சிறிய அளவிலான விடுதி புதிதாக கட்டப்பட்டு உள்ளது.
அங்கு 50 மாணவர்கள் தங்கி உள்ளனர். எனவே பழுதான விடுதியை இடித்து அகற்ற ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. எனவே விரைவில் பணிகள் தொடங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.