தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்

தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம் விடப்படுகிறது என்ற இலங்கை அரசின் அறிவிப்பால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-01-23 16:47 GMT
ராமேசுவரம், 
தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம் விடப்படுகிறது என்ற இலங்கை அரசின் அறிவிப்பால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பறிமுதல்
ராமேசுவரம், மண்டபம், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2010-ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், தலைமன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், மன்னார், உள்ளிட்ட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் ‌விடப்படுவதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பில், இந்திய படகுகள் 105 படகுகள் ஏலம் விடப்படும். வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையிலும் ஏலம்  நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
அதிர்ச்சி
இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கை ஒட்டு மொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது:- 
தமிழக மீனவர்களின் 100-க்கும் மேற்பட்ட படகுகள் ஏலம் விடப்பட உள்ளதாக இலங்கை அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை அரசின் இந்த செயலை ஒட்டு மொத்த தமிழக மீனவர்கள் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். படகுகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. 
மத்திய அரசு நினைத்தால் இலங்கையில் உள்ள தமிழக படகுகளை மீட்டு கொண்டுவர முடியும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு படகுகள் அனைத்தும் மீட்டு கொண்டுவர வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாகும். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்