தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 9962818888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் விவரம் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 9962818888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் விவரம் வருமாறு:-
பாசி படர்ந்த தண்ணீர்
கோத்தகிரி சக்திமலையில் அளக்கரை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. மின் மோட்டார்கள் பழுது காரணமாக கடந்த 2 மாதமாக இங்கு தண்ணீர் கொண்டு வருவது இல்லை. இதனால் இங்குள்ள சுத்திகரிப்பு நிலைய தொட்டியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் பாசி படர்ந்து படுமோசமாக காட்சி யளிக்கிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மோட்டார் பழுதை நீக்கி சீராக குடிநீர் வினியோகம் செய்வது டன், பாசி படர்ந்த தண்ணீரை சுத்தம் செய்ய வேண்டும்.
பாபு, கோத்தகிரி.
போக்குவரத்து நெரிசல்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எள்ளநள்ளியில் இருந்து கேத்தோரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்தி இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
செந்தில்குமார், கேத்தி.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
தபால் பெட்டி மாற்றப்பட்டது
கோவை ரத்தினபுரி பாலம் அருகே சாஸ்திரி ரோட்டில் தபால் பெட்டி உடைந்த நிலையில் இருந்தது. இதனால் அதில் போடும் தபால்களும் கீழே விழுந்தன. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புது தபால் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்.
ராஜாபாய், ரத்தினபுரி.
விளையாட்டு மைதானம் வேண்டும்
கோவை மாநகராட்சி 43-வது வார்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 700 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு தனியாக விளையாட்டு மைதானம் இல்லை. இதன் காரணமாக மாணவர்கள் விளையாட முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகில் அரசுக்கு சொந்தமான 6 ஏக்கர் காலி நிலம் உள்ளது. அதில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
வேலவன், ஆர்.எஸ்.புரம்.
சாலையில் வீசப்படும் முகக்கவசம்
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வெளியே சென்று வருகிறார்கள். ஆனால் சிலர் பயன்படுத்திய முகக்கவசத்தை சாலையில் தூக்கி வீசிச்செல்கிறார் கள். இதனால் கொரோனா மேலும் பரவக்கூடிய நிலை நீடித்து வருகிறது. எனவே இதுபோன்று சாலையில் முகக்கவசத்தை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தோஷ்குமார், எலச்சிபாளையம்.
ஒளிராத தெருவிளக்குகள்
பொள்ளாச்சி உடுமலை ரோடு மரப்பேட்டை வீதியில் பல நாட்களாக மின்விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவில் குற்ற சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
நாகராஜன், பொள்ளாச்சி.
ஓடையில் குவியும் கழிவுகள்
கோவை சங்கனூர் ஓடையில் ரத்தினபுரி, நியூசித்தாபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வீட்டுக் குப்பைகளை அதிகளவில் கொட்டுகின்றனர். இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சங்கனூர் ஓடையில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, கோவை.
குப்பை தொட்டிகள் வேண்டும்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பகுதியில் ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா மையங்கள் உள்ளன. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் உணவு பார்சல் செய்து கொண்டு வருகிறார்கள். இந்த குப்பை கழிவுகளை போட போதிய அளவுக்கு குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் அவர்கள் சாலையோரத்தில் குப்பைகளை வீசுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு போதிய அளவில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.
ரமேஷ், பொள்ளாச்சி.
மின்விளக்குகள் ஒளிருமா?
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினமும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதில் குறிப்பிட்ட சில இடங் களில் மின்விளக்குகள் ஒளிராமல் உள்ளது. இதன் காரணமாக மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்யும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத மின்விளக்குகளை சரிசெய்தனர்.
விக்ரம், புளியகுளம்.
பயன்படுத்த முடியாத சுரங்கப்பாதை
கோவை வெள்ளலூரில் இருந்து நந்தா நகர் செல்ல ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. சாலை வசதி அமைக்காததால் பாதை கரடும் முரடுமாக இருக்கிறது. அத்துடன் இருபுறத்திலும் புதர்கள் ஆக்கிரமித்து உள்ளதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
பாரதி, கோவை.