மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் அடைப்பு

3-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.

Update: 2022-01-23 17:44 GMT
மயிலாடுதுறை:
3-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள்  வெறிச்சோடிக்கிடந்தன.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இதில் இரவு நேர ஊடரங்கு மற்றும் வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
நேற்று 3-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி  முக்கிய வீதிகளான பட்டமங்கலத்தெரு, காந்திஜி சாலை, கச்சேரி சாலை, பூக்கடை தெரு, கூறைநாடு, ரெயிலடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
15 ஆயிரம் கடைகள் அடைப்பு
 முழு ஊரடங்கு காரணமாக மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ்நிலையம் ஆகிய 2 பஸ் நிலையங்களும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
நகரில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் மற்றும் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் சாலையில் சென்ற கார், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். தேவையின்றி கார்கள் மற்றும் ஆட்டோக்களில் வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் 
 ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அவசர தேவைக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்கிற்கு தகவல் சென்றுள்ளது. இதனையடுத்து நகரில் அனைத்து ஆட்டோக்களையும் நிறுத்தி உரிய விசாரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
 அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் சாலையில் சென்ற அனைத்து ஆட்டோக்களையும் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அதில் பயணம் செய்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என விசாரணை நடத்தினர். முழு ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் வெறிச்ேசாடி காணப்பட்டது.
சீர்காழி
சீர்காழி நகர் பகுதிக்குட்பட்ட தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி, காமராஜ் வீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ஈசானிய தெரு, ெரயில்வே ரோடு, சிதம்பரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 
மேலும் பஸ், லாரி, கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படாததால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சீர்காழியில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
 இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.  வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் மூடப்பட்டிருந்தன. 
ஊரடங்கை முன்னிட்டு திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்