முழு ஊரடங்கில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு-பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடின

முழு ஊரடங்கில் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடின.

Update: 2022-01-23 19:46 GMT
மதுரை, 

முழு ஊரடங்கில் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடின.

கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கும் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த முழு நேர ஊரடங்கில் மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் கட்டுப்பாடுகளின்றி திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதனால் அந்த கடைகள் நேற்று வழக்கம் போல் திறந்து இருந்தன.
ஓட்டல்களில் பார்சல்கள் மட்டும் வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதனால் நேற்று பெரும்பாலான ஓட்டல்களில் பார்சல்கள் வாங்க பொதுமக்கள் குவிந்து இருந்தனர். குறிப்பாக தெற்கு வாசல், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், அனுப்பானடி, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் கூடியது. பொதுமக்களும், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களும் ஓட்டல்கள் முன்பு குவிந்து இருப்பதை காண முடிந்தது. குறிப்பாக பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் மிக அதிக கூட்டம் இருந்தது. கொரோனா பரவலை யாரும் முன்னெச்சரிக்கையாக இருந்ததாக தெரியவில்லை. பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.

ஆட்டோக்கள்
அதே போல் பஸ் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் ஆட்டோக்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பயணிகள் சாலைகளில் அதிகளவு இல்லாததால் சில ஆட்டோக்கள் மட்டுமே இயங்கியது. ஆஸ்பத்திரி மற்றும் ரெயில் நிலையம் செல்வோர் மட்டும் ஆட்டோக்களில் செல்வதை காண முடிந்தது. பஸ் போக்குவரத்து இல்லாததால் பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி ஆகிய இடங்கள் வெறிச்சோடி இருந்தது. முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புக்கள் அமைந்து இருந்தாலும் கெடுபிடி காட்டவில்லை. அதனால் அதிக அளவு இருச்சக்கரம் மற்றும் கார் போக்குவரத்து அதிகளவில் இருந்தது. சில முக்கிய சாலைகளில் சிறுவர்கள் சைக்கிளில் கூட்டமாக வலம் வந்தனர். வைகை ஆற்றுக்கரை சாலைகளில் சிறுவர்கள் கிரிக்கெட், கால்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்தனர். வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்குமா என்பது தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கையை பொறுத்தே அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்