மாமல்லபுரம் கலங்கரைவிளக்கம் மூடப்பட்டது

கொரோனா தொற்று அதிகரிப்பால் மாமல்லபுரம் கலங்கரைவிளக்கம் மூடப்பட்டது.

Update: 2022-01-24 13:11 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள நீளமான பாறை மீது இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது கலங்கரை விளக்கம். இது 1887-ம் ஆண்டு கட்டப்பட்டது. வங்கக்கடலில் பயணிக்கும் கப்பல் மற்றும் படகுகள் இந்த பகுதியை அறிந்து விலகி செல்லவும், மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தில் தொடக்கத்தில் மண்எண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்டது. கடந்த 1940-ம் ஆண்டு மின்னணுகருவிகள் பொருத்தப்பட்டு, நவீனதொழில் நுட்பத்தில் இந்த கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தின் உச்சி பகுதியில் இருந்து மாமல்லபுரம் சுற்றுப்புற பரப்பளவில் உள்ள கடற்கரையின் அழகிய காட்சியையும் ஊர் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் புராதன சிற்பங்களின் அழகிய காட்சியையும் கண்டு ரசிப்பர்.

தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் சுற்றுலா பயணிகளை கலங்கரை விளக்கத்தில் அனுமதித்தால் தொற்று அதிகரிக்கும் சூழல் உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு தற்காலிகமாக கலங்கரை விளக்கம் மூடப்படுவதாக கலங்கரை விளக்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்