பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு

டாப்சிலிப் வனப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2022-01-24 22:26 IST
பொள்ளாச்சி

டாப்சிலிப் வனப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், ஆனைமலை புலிகள் காப்பகம் இணைந்து பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள கூமாட்டியில் பழங்குடியின மக்களுக்கு அறிவுசார் மேம்பாட்டு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 முகாமை கரும்பு இனப்பெருக்க மையத்தின் முதன்மை விஞ்ஞானி புத்திர பிரதாப் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் பழங்குடியின பிரிவிற்கான செயல் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

 பெரும்பாலும் சத்துக்கள், தாது உப்புகள் குறைவாக இருப்பதால் வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது. இந்தியாவில் 5 வயதிற்கு குறைவான 40 சதவீத பழங்குடியின குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு உள்ளது. அதாவது 47 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு சமச்சீர் உணவு கிடைப்பதில்லை.

பண்ணை கருவிகள்

ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்வதற்கு ஊட்டம் தரும் வீட்டுத் தோட்டம் அமைக்க வேண்டும். இதற்கான தரமான காய்கறி விதைகள் மற்றும் தொழல்நுட்ப ஆலோசனை வழங்கப்படும். மேலும் குறைந்த வயதில் திருமணம் செய்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது.

பழங்குடியின மக்களின் அறிவுசார் மேம்பாட்டிற்காக ரேடியோ வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசின் திட்டங்கள், கல்வி மற்றும் பொதுவான விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். மேலும் எந்த நேரம் எந்தவிதமான நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில் பழங்குடியின குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் வெண்டைக்காய் உள்ளிட்ட 9 வகையான காய்கறி விதைகள், 30 வகையான பண்ணை கருவிகள், ரேடியோ, பாக்கு மரக்கன்றுகள், வெல்லம் வழங்கப்பட்டது.

உறுதிமொழி

முன்னதாக ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன், வனச்சரக அலுவலர் (பயிற்சி) சதீஷ், கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதுநிலை விஞ்ஞானிகள், மோகன்ராஜ், கீதா, சீனிவாசா, கிராம தலைவர்கள் மணி, சுதேவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று பாலக்கிணற்றிலும் பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்