முழு சுகாதாரம் அடைந்த கிராமமாக மாற்ற பொள்ளாச்சி, ஆனைமலையில் 6 ஊராட்சிகள் தேர்வு

முழு சுகாதாரம் அடைந்த கிராமமாக மாற்றுவதற்கு பொள்ளாச்சி ஆனைமலையில் 6 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update:2022-01-24 22:27 IST
பொள்ளாச்சி

முழு சுகாதாரம் அடைந்த கிராமமாக மாற்றுவதற்கு பொள்ளாச்சி ஆனைமலையில் 6 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கணக்கெடுப்பு பணி

தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் முழு சுகாதாரம் அடைந்த கிராமமாக மாற்றுவதற்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஊராட்சி ஒன்றியங்களில் தலா 2 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊராட்சிகளில் மேற்கொள்ளவேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பணிகளை ஆனைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் பில் சின்னாம் ஊராட்சியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கணக்கெடுப்பு விவரங்களை கேட்டறிந்தார். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

6 ஊராட்சிகள் தேர்வு

முழு சுகாதாரம் அடைந்த கிராமமாக மாற்றும் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி ஊராட்சிகளும், வடக்கு ஒன்றியத்தில் பூசாரிபட்டி, சந்தேகவுண்டன்பாளையம் ஊராட்சிகளும், ஆனைமலை ஒன்றியத்தில் சுப்பேகவுண்டன்புதூர், பில் சின்னாம்பாளையம் ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இந்த 6 ஊராட்சிகளில் திடக்கழிவு, கழிவு திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அதில் இருந்து மண்புழு உரம் தயாரிப்பது, தனிநபர் உறிஞ்சி குழாய், உறிஞ்சு குழாய்கள் அமைப்பது, கழிவுநீர் கட்டுவது உள்ளிட்ட சுகாதார பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

 இதற்காக ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்கள், மக்கள்தொகை, செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேவைப்படும் நிதி உள்ளிடவைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும் நிதி ஒதுக்கீடு செய்தபின் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்