வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்

வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் பெண் குடியேற வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-01-24 22:53 IST
மயிலாடுதுறை:-

வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் பெண் குடியேற வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியேற வந்த பெண்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஆச்சாள்புரம் வள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்தவர் லில்லிபாய் (வயது33). நேற்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இவர் அங்கேயே குடியேற போவதாக கூறி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சங்கர் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் லில்லிபாயிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது அவர் தன்னை சிலர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும், அதனால் நான் கலெக்டர் அலுவலகத்தில் குடியேற போவதாகவும் கூறினார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சீர்காழி தாசில்தார் அலுவலகத்துக்கு செல்லும்படி வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். அதன்பின் லில்லிபாய் அங்கிருந்து புறப்பட்டு சீர்காழிக்கு சென்றார். 
முன்னதாக லில்லிபாய் நிருபர்களிடம் கூறியதாவது:- 

வீட்டை விட்டு வெளியேற்றினர்

நான் அரசால் குடியுரிமை வழங்கப்பட்ட பட்டா இடத்தில் தொண்டு நிறுவனம் மூலம் கட்டிகொடுக்கப்பட்ட ஒருவருக்கு சொந்தமான வீட்டில் ரூ.50 ஆயிரம் கொடுத்து குடியிருந்து வந்தேன். அந்த வீடு வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது. இதனால் சிலர் என்னை வீட்டைவிட்டு வெளியே தள்ளி பூட்டிவிட்டனர். வீட்டில் என்னுடைய நகை, பணம் மற்றும் பொருட்களை எடுக்கவிடாமல் மிரட்டல் விடுத்தனர். மேலும் நான் கொடுத்த பணத்தையும் தராமல் என்னை அடித்து துரத்தி விட்டனர். பல நாட்களாக உறவினர்கள் பலருடைய வீட்டில் தங்கிவிட்டேன். தொடர்ந்து என்னால் உறவினர்கள் வீட்டில் தங்க இயலவில்லை. எனவே எனது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் நான் குடியிருந்த வீட்டிற்கு முறைகேடாக குடியுரிமை பட்டா பெற்றுள்ளதை திரும்பப்பெற வேண்டும். பணத்தையும், பொருட்களையும் மீட்டுத்தர வேண்டும். இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்