கோவை ரெயில் நிலையம் முன்பு கழிவுநீர் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்
கோவை ரெயில் நிலையம் முன்பு கழிவுநீர் தேங்கியதால் பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியது.;
கோவை
கோவை ரெயில் நிலையம் முன்பு கழிவுநீர் தேங்கியதால் பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியது.
கழிவுநீர் தேங்கியது
கோவை மாநகராட்சி சார்பில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணி நடந்து வருகிறது. இதற்காக கோவை கலெக்டர் அலுவலகம் முதல் ரெயில் நிலைய சாலை வழியாக லங்கா கார்னர் வரை ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது.
இதற்காக சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. தொடர்ந்து பணிகள் முடிவடைந்ததால் பள்ளம் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் விடப்பட்டன.
இந்த நிலையில் கோவை ரெயில் நிலையம் அருகே பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது. அந்த தண்ணீர் சாலையில் தேங்கி நின்றது.
அரசு பஸ் சிக்கியது
இந்த நிலையில் கோவை காந்திபுரத்தில் இருந்து சுல்தான்பேட்டைக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் ரெயில் நிலையம் முன்பு வந்தபோது, திடீரென்று கழிவுநீர் தேங்கி நின்ற பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பஸ் டிரைவர் எவ்வளவு முயன்றும் அந்த பஸ்சை வெளியே எடுக்க முடியவில்லை.
இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அந்த பஸ் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளமாக காணப்பட்ட இந்த சாலையை சீரமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.