ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் மணிமண்டபத்தில் அமைச்சர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் மணிமண்டபத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.;

Update:2022-01-25 19:12 IST
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பழமையான புகழ்பெற்ற ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷியகாரர் சாமி கோவில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ராமானுஜரின் 1000-வது ஆண்டு அவதார திருவிழா நடைபெற்றது. அப்போது தமிழக அரசு ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜருக்கு மணிமண்டம் கட்ட போவதாக அறிவித்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே 2.77 சென்ட் நிலத்தில் ராமானுஜருக்கு மணிமண்டம் கட்ட இடம் தேர்வு செய்து ரூ.6 கோடியே 69 லட்சத்தில் ராமானுஜர் மணிமண்டபம், அருங்காட்சியகம், வேதப்பாடசாலை, அலுவலகம், மற்றும் பூங்கா கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான கட்டுமான பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி 2021-ம் ஆண்டு ஜனவரியில் முடிவடைந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மணிமண்டபத்தில் சிமெண்டு கலவையால் செய்யப்பட்ட ராமானுஜர் சிலை ராமானுஜர் சாயலில் இல்லை, தரமாகவும் இல்லை எனவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மணிமண்டபத்தை ஆய்வு செய்தார். சிமெண்டு கலவையால் செய்யப்பட்ட ராமானுஜர் சிலையை அகற்றி கருங்கல்லால் ஆன சிலையை அமைக்க அமைச்சர் தா.மோ. அன்பரசன் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழுத்தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் கோபால், ஆதிகேசவ பெருமாள் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்