குடியரசு தினத்தையொட்டி நீலகிரியில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை

குடியரசு தினத்தையொட்டி நீலகிரியில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.;

Update:2022-01-25 20:10 IST
குடியரசு தினத்தையொட்டி நீலகிரியில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை
ஊட்டி

இன்று (புதன்கிழமை) குடியரசு தின விழா நடக்கிறது. இதையொட்டி விழா நடக்கும் மைதானத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

குடியரசு தின விழா

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், 73-வது குடியரசு தின விழா இன்று (புதன்கிழமை) ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கலெக்டர் அம்ரித் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். 

பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. குடியரசு தின விழா நடைபெற உள்ள மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அங்கு விழாவுக்காக மேடை அமைக்கப்பட்டு, கொடிக்கம்பம் நடப்பட்டு இருக்கிறது. அதன் இருபுறமும் அரசு அலுவலர்கள், அவரது குடும்பத்தினர்கள் அமர சாமியானா பந்தலுடன் இருக்கைகள் போடப்பட்டு உள்ளது.

 இந்தநிலையில் நேற்று கொரோனா பரவலை தடுக்க விழா நடைபெறும் மைதானத்தில் நகராட்சி மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும் மைதானம் மற்றும் சேரிங்கிராசில் இருந்து மைதானத்துக்குச் செல்லும் 2 சாலைகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனை

குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விழாவில் கலந்துகொள்கிறவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. விழா நடக்கும் இடத்தில் வெடிகுண்டு சோதனைக்காக மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

 அங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நுழைவுவாயில் பகுதியில் அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சேரிங்கிராசில் உள்ள காந்தி சிலை மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

குடியரசு தினவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்