கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-25 14:42 GMT
தேனி:

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கம்பம் ராமகிருஷ்ணன். இவருக்கு வயது 73. நேற்று பகலில் இவர் காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில், கம்பம் ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்குள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதனிடம் கேட்டபோது, "காய்ச்சல், உடல்வலி இருந்ததால் சிகிச்சைக்காக வந்தபோது கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளது. லேசான காய்ச்சல் பாதிப்பு தான்" என்றார். 

கொரோனா பாதிக்கப்பட்ட கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேற்று காலை கம்பம் காந்தி சிலை அருகில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகு கம்பத்தில் ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த தாலிக்கு தங்கம், திருமண நிதிஉதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்