மாணவர்களை வீட்டுக்கு வரவழைத்து நேரடி வகுப்பு நடத்திய தனியார் பள்ளி ஆசிரியர். தட்டிக்கேட்ட அதிகாரியுடன் வாக்குவாதம்

நாட்டறம்பள்ளி அருகே ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை வீட்டுக்கு வரவழைத்து பள்ளிக்கூடம் போன்று தனியார் பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தினார். இதை தட்டிக்கேட்ட அதிகாரியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-01-25 17:12 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை வீட்டுக்கு வரவழைத்து பள்ளிக்கூடம் போன்று தனியார் பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தினார். இதை தட்டிக்கேட்ட அதிகாரியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நேரடி வகுப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கத்தாரி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தான் பணிபுரியும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஒன்று திரட்டி அனைவரையும் வரவழைத்து நேரடி வகுப்புகள் நடத்தினார்.

அதிகாரியுடன் வாக்குவாதம்

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ரா என்பவர் நேரடி வகுப்பு நடத்தக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டினார். ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர் இல்லம் தேடி கல்வி மூலம் நேரடி வகுப்புகள் நடத்துவதாக கூறினார். இதனால் அந்த பள்ளி ஆசிரியரிடம் அதற்கான ஆணை இருக்கிறதா என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 இது குறித்து தகவலறிந்ததும் கத்தாரி ஊராட்சி மன்ற தலைவர் மோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி, பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
=====

மேலும் செய்திகள்