தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;

Update:2022-01-25 22:50 IST
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 


எச்சரிக்கை பலகை வேண்டும்

பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் மெயின்ரோட்டில் செஞ்சேரிமலைக்கு சாலை பிரிகிறது. இங்கு எப்போதும் போக்கு வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் அங்கு எச்சரிக்கை பலகை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து செஞ்சேரி மலை ரோடு பிரிவதற்கு முன்பே சற்று தொலைவில் விபத்து குறித்த எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
மாரிமுத்து, சுல்தான்பேட்டை.

தொற்றுநோய் பரவும் அபாயம்

  கோவை அருகே உள்ள நல்லட்டிபாளையம் பட்டணம் பகுதியில் சுகாதார பணியை சரிவர மேற்கொள்வது இல்லை. இதனால் இங்கு குப்பைகள் சூழ்ந்து இருப்பதுடன், சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இதன் காரணமாக இங்கு தொற்றுநோய் ஏற்படக்கூடிய அபாய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சுகாதார பணியை முறையாக செய்ய வேண்டும்.
  ஆறுமுகம், நல்லட்டிபாளையம்.

குப்பைகளால் துர்நாற்றம்

  கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அவை முறையாக சுத்தம் செய்யப் படாததால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்குள்ள குப்பைகளை சுத்தம் செய்வதுடன், கோவில் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
  பழனிசாமி, ஆர்.எஸ்.புரம்.

சுகாதார சீர்கேடு

  கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் குளத்தின் மறுபகுதியில் சிலர் குப்பைகளையும் கழிவுகளையும் கொண்டு வந்து வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் கடும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  செல்வகுமார், கோவை.

கட்டிட கழிவுகள்

  கோவை சங்கனூர் ஓடையில் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஓடையில் தண்ணீர் சீராக செல்லாமல் ஆங்காங்கே தேங்குகிறது. தற்போது இந்த ஓடையில் கழிவுநீர் அதிகளவில் செல்வதால், அவை ஆங்காங்கே தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த ஓடையில் கட்டிட கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
  ரவி, கோவை.

தெருநாய்கள் தொல்லை

  பொள்ளாச்சி பல்லடம் ரோடு விநாயகர் கோவில் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தெருநாய் கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள் ரோட்டில் நடப்பதற்கு பயப்படுகின்றனர். வாகனங்கள் வரும் போது நாய்கள் குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ரமேஷ், பொள்ளாச்சி

தேங்கி நிற்கும் கழிவுநீர்

  பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலைமை தபால் நிலையம் முன்பு சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியில் நிற்பதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
  பிரதாப், வடக்கிபாளையம்.

சாலையில் பள்ளம் 

  கோவை சிறை அருகே உள்ள சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங் களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
  வினோதினி, காட்டூர்.

குப்பைகளை எரிப்பதால் அவதி

  கோவை மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட இ.பி.காலனி பேஸ்-2, வி.ஜி.ராவ் நகர், பூங்கா 3-வது வீதியில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இவை மாலையில் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகளவில் புகை ஏற்படுவதால், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.
  சுப்பிரமணியம், இ.பி.காலனி.

சாக்கடை ஆக்கிரமிப்பு 

  கோவையை அடுத்த வெள்ளலூர் 8-வது வார்டு காந்திநகர் பகுதியில் சாக்கடை முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. அங்கு முட்புதர்கள் ஆக்கிரமித்து அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
  மனோகரன், வெள்ளலூர்.
  

மேலும் செய்திகள்