மருத்துவப்படிப்பில் அரசு பள்ளிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு: தரவரிசை பட்டியலில் புதுக்கோட்டை மாணவர் முதலிடம் கடும் முயற்சியுடன் படித்து ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றதாக பேட்டி

மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தரவரிசை பட்டியலில் புதுக்கோட்டை மாணவர் முதலிடம் பிடித்தார். கடும் முயற்சியுடன் படித்து ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றதாக மாணவர் தெரிவித்தார்.

Update: 2022-01-25 17:57 GMT
புதுக்கோட்டை:
தரவரிசை பட்டியல்
மருத்துவப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் இளநிலை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் விவரம் வெளியிடப்பட்டது. ‘நீட்’ தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்த மாணவர் சிவா முதல் இடம் பிடித்தார். 
 இவர் ‘நீட்’ தேர்வில் 514 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மாணவர் அறந்தாங்கி அருகே சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பை கடந்த 2020-2021-ம் கல்வி ஆண்டில் முடித்திருந்தார். மாணவரின் தந்தையான அய்யப்பன் ஆட்டு தோல் வியாபாரம் செய்து வருகிறார். தாய் புனிதா குடும்ப தலைவி ஆவார். மாணவரின் தங்கை ஐஸ்வர்யா அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
கடும் முயற்சியுடன் படித்தேன்
அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவர் சிவா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் பிளஸ்-2 வகுப்பை கடந்த ஆண்டு படித்து முடித்த பின்பு வேளாண்மை துறையில் சேர்ந்து படிக்க இருந்தேன். அப்போது ஆசிரியர்கள் மருத்துவப்படிப்பில் சேர அறிவுறுத்தினர். இதனால் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகினேன். வீட்டில் இருந்து படித்து வந்தேன். ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி படித்தேன். 
திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் கடைசி 2 மாதம் சேர்ந்து ‘நீட்’ தேர்வுக்கு தயாராகினேன். தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பேன் என எதிர்பார்த்தேன். 514 மதிப்பெண்கள் எடுத்தது எனக்கு மகிழ்ச்சி தான். தற்போது மாநில அளவில் முதல் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடும் முயற்சியுடன் படித்தேன். விடா முயற்சியுடன் படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம். நான் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தான் காரணம். பெற்றோரும் எனக்கு துணையாக இருந்தனர். நான் படித்த பள்ளியில் தற்போது ‘நீட்’ தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்’’ என்றார்.
மாணவருக்கு பாராட்டு
மாணவர் சிவாவை மாவட்ட கலெக்டர் கவிதாராமு நேற்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ஆகியோர் உடன் இருந்தனர். மாணவரின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். 
இதேபோல முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., மாணவர் சிவாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அவரது ஆசிரியர்களையும், பெற்றோரையும் கவுரவித்தார். இதேபோல பொதுமக்கள் உள்பட பலரும் மாணவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்