பாளையங்கோட்டை அருகே கார் மோதி தொழிலாளி சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு பாலம் அமைக்க வலியுறுத்தல்

பாளையங்கோட்டை அருகே கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

Update: 2022-01-25 22:03 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். எனவே அங்கு பாலம் அமைக்க வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளி சாவு
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் மேலூரை சேர்ந்தவர் மந்திரம் (வயது 37). பூ கட்டும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் கன்னியாகுமரி - மதுரை நான்கு வழிச்சாலையில் பொட்டல் விலக்கு பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மந்திரம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மந்திரம் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை மறியலுக்கு முயற்சி
இந்த நிலையில் மந்திரத்தின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று பொட்டல் விலக்கு பகுதியில் நான்கு வழிச்சாலையில் மறியல் செய்வதற்காக திரண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலை மறியல் செய்ய முயன்ற பொது மக்களை தடுத்து நிறுத்தி அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பாலம் அமைக்க வேண்டும்
அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறுகையில், “பொட்டல் விலக்கு பகுதியில் இதுவரை ஏராளமான விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் பலர் இறந்தும் உள்ளனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்து அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே பொட்டல் விலக்கு பகுதியில் உடனடியாக தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும் அங்கு பாலம் அமைத்து தர வேண்டும். அதுவரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம்” என்றனர்.
மேலும் அந்தப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த விளக்கு செயல்பாட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. உடனடியாக அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே அவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போலீசார் சார்பில், அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்புகள் உடனடியாக வைக்கப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அப்போது இந்தப் பகுதியில் உடனடியாக எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் பாலம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்