‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update:2022-01-26 20:27 IST
தெருநாய்கள் தொல்லை

சரவணம்பட்டியில் உள்ள கார்த்திக் நகர், அம்மன் கோவில் பகுதி போன்ற பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் பீதி அடைவதோடு விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஷ்ணு, சரவணம்பட்டி. 

தேங்கி கிடக்கும் மழைநீர்

கோவை குனியமுத்தூர் மகாராஜா காலனி பகுதியில் சாலையோரத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த குப்பைகளில் கால்நடைகள் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றவும், குப்பைகள் கொட்டாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது சமீர், குனியமுத்தூர்.

போக்குவரத்துக்கு இடையூறு

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் கனரக வாகனங்கள் பெருமாள் கோவில் வழியாகவும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் கனரக வாகனங்கள் கஸ்தூரிபாளையம் வழியாகவும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருப்பார்கள்.

ஜெகதீஸ் பாபு, பெரியநாயக்கன்பாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை சரவணம்பட்டியில் பெரிய வீதி, விசுவாச புரம், மருதம் நகர் உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலை உள்ளது. இது தவிர தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

ராஜூ, சரவணம்பட்டி.

சாலை சீரமைக்கப்படுமா?

கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா தடுப்பணைக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த வழியாக பல கிராமங்களுக்கு வாகனங்கள் சென்று வருவதுடன், விவசாயிகள் தங்களது விளைபொருட்களையும் விற்பனைக்காக சிரமத்துடன் சுமந்து சென்று வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆடில் அக்பர், கோத்தகிரி.

குப்பைக்கு தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை

கோவை கணபதி காந்திமாநகர் போலீஸ் நிலையம் செல்லும் வழியில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த குப்பைகளில் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அதனருகில் உள்ள புதர் செடிகள், மரங்கள் தீப்பற்றி எரிகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாக மாறி விடுகிறது. மேலும் அந்த வழியாக மின்கம்பிகளும் செல்வதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

செல்வராஜ், கணபதி.

கால்வாய் ஆக்கிரமிப்பு

கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு செல்லும் சாலைக்கு அடியில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சிலர் கால்வாயை முற்றிலுமாக மூடி ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைத்து உள்ளனர். இதன் காரணமாக மழைக்காலத்தில் கால்வாயில் நீரோட்டம் தடைபட வாய்ப்பு இருக்கிறது. எனவே அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகர், கோத்தகிரி.

பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்

கோவை குட்செட் சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் அவ்வப்போது பழுதடைந்து விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் விபத்து நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி அங்கு போக்குவரத்து சிக்னலில் உள்ள பழுதை சரி செய்து சீராக இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரஹீம், உக்கடம்.

பள்ளி சுவரில் சினிமா போஸ்டர்கள்

ஆனைமலை அருகே கம்பாலபட்டியில் உள்ள அரசு பள்ளி சுற்றுச்சுவரில் கல்வி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. ஆனால் அந்த வாசகங்களை சிலர் மறைத்து, சினிமா போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளி சுவரில் இதுபோன்ற விளம்பரங்களை செய்வது வேதனையளிக்கிறது. எனவே விழிப்புணர்வு ஏற்படுத்த எழுதப்பட்டு இருந்த வாசகங்களை மறைத்து ஒட்டப்பட்ட சினிமா போஸ்டர்களை அகற்ற வேண்டும். மேலும் அந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து, ஆனைமலை.


விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பாலசுந்தரம் சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மகளிர் பாலிடெக்னிக் சிக்னல் அருகே இடதுபுறம் திரும்பும்போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே அங்குள்ள குண்டும், குழியுமான சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரபீக், கோவை.

மேலும் செய்திகள்