ஆழியாறில் சாலையின் குறுக்கே காட்டு யானை நின்றதால் பரபரப்பு
ஆழியாறில் சாலையின் குறுக்கே காட்டு யானை நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை காட்டுக்குள் துரத்தினார்கள்.;
பொள்ளாச்சி
ஆழியாறில் சாலையின் குறுக்கே காட்டு யானை நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை காட்டுக்குள் துரத்தினார்கள்.
காட்டு யானை நின்றது
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்து விட்டது. இதனால் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்கு வனவிலங்குகள் தாகம் தீர்க்க வருகின்றன.
இதற்கிடையில் ஆழியாறு சின்னார் பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் சாலையின் நடுவே காட்டு யானை முகாமிட்டு இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வனத்துறையினர் துரத்தினர்
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதன் காரணமாக வால்பாறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானை குரங்கு நீர்வீழ்ச்சி, சின்னாறுபதி பகுதியில் சுற்றி வருகிறது. யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அதுபோன்று வால்பாறை மலைப்பாதையிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
கடும் நடவடிக்கை
எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வால்பாறை ரோட்டில் வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். யானையை பார்த்தால் அருகில் செல்வது, செல்பி புகைப்படம் எடுப்பது மற்றும் விரட்ட கூடாது. யானையை தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.