257 பேருக்கு ரூ.32½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் நடந்த 73-வது குடியரசு தினவிழாவில் 257 பேருக்கு ரூ.32 லட்சத்து 65 ஆயிரத்து 762 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2022-01-26 19:03 GMT
திருவாரூர்:
திருவாரூரில் நடந்த 73-வது குடியரசு தினவிழாவில் 257 பேருக்கு ரூ.32 லட்சத்து 65 ஆயிரத்து 762 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
குடியரசு தின விழா
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 73-வது குடியரசு தின விழா  கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. 
விழாவில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் உலக சமாதானத்தை வலியுறுத்தி வெண் புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து சிறப்பாக பணி புரிந்த போலீசாருக்கு முதல்-அமைச்சரின் பதக்கம், 19 பேருக்கு நற்சான்றிதழ், 253 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் 250 பேருக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான முதியோர், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 பேருக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 762 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கமும் என மொத்தம் 257 பேருக்கு ரூ.32 லட்சத்து 65 ஆயிரத்து 762 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகள் 
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. மேலும் குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட  ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்