78 பேருக்கு ரூ.47 லட்சம் நலத்திட்ட உதவிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு 78 பயனாளிகளுக்கு ரூ.47¼ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று வழங்கினார்.

Update: 2022-01-26 19:57 GMT
மதுரை, 

குடியரசு தின விழாவை முன்னிட்டு 78 பயனாளிகளுக்கு ரூ.47¼ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று வழங்கினார்.

அணிவகுப்பு 

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆயுதப்படை மைதானத்தில்  குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மூத்த குடிமக்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளியுடன் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் அனிஷ்சேகர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.அன்பு, மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாராட்டு சான்றிதழ்

இந்த விழாவில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் 78 பயனாளிகளுக்கு ரூ.47 லட்சத்து 22 ஆயிரத்து 94 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 223 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்கள், மாவட்ட நிர்வாகம் சார்பாக 69 போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 317 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அனிஷ் சேகர் வழங்கினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் உதயகுமார், பெரியபுள்ளான், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து கலெக்டர் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை கவுரவிக்கும் விதமாக வடக்கு மாசி வீதி பகுதியில் வசிக்கும் தியாகி சுந்தரமகாலிங்கம், பழங்காநத்தம் பகுதியில் வசிக்கும் திருநாவுக்கரசு ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று பொன்னாடை போர்த்தினார்.

மேலும் செய்திகள்