திருக்கழுக்குன்றம் அருகே ரூ.50 ஆயிரம் கேட்டு வாலிபரை கடத்திய 6 பேர் கைது

திருக்கழுக்குன்றம் அருகே ரூ.50 ஆயிரம் கேட்டு வாலிபரை கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-01-27 17:03 IST
கடத்தல்

திருக்கழுக்குன்றம் புது மேட்டு தெருவை சேர்ந்தவர் திலக்ராஜ் (வயது 20). இவரது நண்பர் திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கத்தை சேர்ந்த புருஷோத் (25). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருக்கழுக்குன்றம் அடுத்த நாவலூர் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து 6 பேர் திடீரென இறங்கி புருஷோத்தை மிரட்டி துரத்தி விட்டு திலக்ராஜை அந்த காரில் கடத்திச்சென்றனர்.

திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கம் என்ற இடத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து நான் ஜெயிலுக்கு சென்றிருந்த போது என் பெயரை சொல்லி நீ கஞ்சா விற்றுள்ளாய். எனவே நீ எனக்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று வினோத் என்பவர் திலக் ராஜை கேட்டு அடித்ததாக கூறப்படுகிறது.

அவர்களிடம் இருந்து திலக்ராஜ் தப்பிச்சென்று இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கைது

விசாரணையில் வாலிபரை கடத்தியவர்கள் செங்கல்பட்டை அடுத்த பட்டரவாக்கம் கிராமத்தை சேர்ந்த வினோத் (37), திருப்போரூர் அடுத்த கரும்பாக்கத்தை சேர்ந்த பாஷா (31), முருகன் (40), திருவடிசூலத்தை சேர்ந்த சேஷா (25), கோதண்டன் (23), கேளம்பாக்கம் அடுத்த மேலையூரை சேர்ந்த பிரபாகரன் (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்