வனப்பணியாளர்களுக்கு காட்டுத்தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனப்பணியாளர்களுக்கு காட்டுத்தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update:2022-01-27 21:46 IST
வால்பாறை

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனப்பணியாளர்களுக்கு காட்டுத்தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலாண்மை பயிற்சி

வால்பாறை அட்டகட்டி பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் நவீன வன மேலாண்மை பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரக வனவர்கள், 

வனபாதுகாவலர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர், துணை கள இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில் காட்டுத்தீ தடுப்பு மேலாண் மை பயிற்சியளிக்கப்பட்டது.

வால்பாறையில் தற்போது கோடைகாலம் தொடங்கியதால் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனத்துறையினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காட்டுத்தீ தடுப்பு பயிற்சிளிக்கப்பட்டது.

காட்டுத்தீ அணைப்பது

பயிற்சியில் காட்டுத்தீ எவ்வாறு உருவாகிறது, காட்டுத்தீ எந்தெந்த வனப் பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளது. அதற்கான காரணங்கள் எது என்பதை கண்டறிந்து அந்த வனப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது. கடந்த காலங்களில் காட்டுத்தீ ஏற்பட்ட போது மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பது குறித்து விளக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காட்டுத்தீ தடுப்பு பணியில் ஈடுபடும் போது விபத்துகள், தீக்காயங்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள், சிகிச்சை முறைகள் குறித்து சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பெண் மருத்துவர் டாக்டர் வசந்தி விளக்கினார். 

காட்டுத்தீ அணைக்கும் பணியின் போது மேற்கொள்ள வேண்டிய நவீன முறைகள் தீயின் தன்மைகள் காட்டுத்தீ பிடித்துள்ள வனப்பகுதியில் முதலில் காற்றின் திசை, காற்றின் வேகம் ஆகியற்றை கருத்தில் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ராமச்சந்திரன் விளக்கினார்.

சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

வனப்பகுதிக்குள் இருந்து காட்டுத்தீயை அணைக்கும் பணிகளை குறித்து தகவல் தொடர்பு கருவிகள் மூலம் தகவல் தெரிவிப்பது தகவல் தொழில்நுட்ப வாக்கிடாக்கிகளை பயன்படுத்தும் முறைகள் குறித்து தகவல் தொடர்பு அதிகாரி லோகநாதன் விளக்கினார்.

இதனை தொடர்ந்து வால்பாறை பகுதியிலும் பழங்குடியினர் கிராம பகுதிகளிலும் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கும் காட்டுத்தீ தடுப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. 

பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மையத்தின் உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் வனசரகர் புகழேந்தி, வனவர்கள் முனியாண்டி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்