கட்டிடம் இடிந்து 2 மாணவர்கள் பலி

கடலூர் அருகே கட்டிடம் இடிந்து 2 மாணவர்கள் பலியானார்கள். படுகாயமடைந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2022-01-27 16:43 GMT
கடலூர், 

கடலூர் அருகே ராமாபுரம் எஸ்.புதூர் வண்டிக்குப்பத்தில் கடந்த 2013-ம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக 130 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் இந்த வீடுகளில் இலங்கை அகதிகள் வசிக்கவில்லை. தொண்டு நிறுவனங்கள் மூலம் கட்டப்பட்ட இந்த வீடுகள் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்து கிடக்கின்றன. சில வீடுகளில் பக்கவாட்டு சுவர்கள் மட்டும் எலும்பு கூடாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் வெள்ளக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் எஸ்.புதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாணிக்கவேல் மகன் சுதீஷ்குமார் (வயது 17), தணிகாசலம் மகன் புவனேஷ் என்கிற புவனேஷ்வரன் (17), வண்டிக்குப்பம் செம்பருத்தி தெரு தெய்வசிகாமணி மகன் வீரசேகர் (17) ஆகிய 3 பேரும் அங்குள்ள ஒரு பழைய கட்டிடத்தில் அமர்ந்து பேசி விளையாடிக்கொண்டிருந்தனர்.

2 மாணவர்கள் பலி 

அப்போது அந்த கட்டிடம் திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் 3 பேரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. 
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிராம மக்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 மாணவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்பு பணிக்கு பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது. நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின் சுதீஷ்குமார், வீரசேகர் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர்.  படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த புவனேஸ்வரன், சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
இதனிடையே பலியான சுதீஷ்குமார், வீரசேகர் ஆகிய 2 பேரது உடலும் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. 

போலீசார் விசாரணை 

முன்னதாக இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்ற புவனேஷ்வரனை பார்வையிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இது பற்றிய புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

மேலும் செய்திகள்