பணப்பட்டுவாடாவை தடுக்க 72 பறக்கும் படைகள் அமைப்பு

பணப்பட்டுவாடாவை தடுக்க கோவையில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.;

Update:2022-01-27 22:55 IST
கோவை

பணப்பட்டுவாடாவை தடுக்க கோவையில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் 831 பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,171 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி உள்ளிட்டவர்களின் படம் அகற்றப்பட்டது.

உரிய ஆவணங்கள்

கோவை மாநகர் முழுவதும் பாலங்கள், சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த கட்சி தலைவர்களின் சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றினார்கள். அரசியல் தலைவர்களின் பெயர் களுடன் எழுதப்பட்டு இருந்த ஓவியங்களையும் பெயிண்ட் மூலம் அழித்தனர். 

மேலும் மாவட்டம் முழுவதிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங் கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. மேலும் தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
72 பறக்கும் படைகள்

அத்துடன் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்யப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் முக்கிய சாலைகளில் வாகனங்களில் சென்று 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லக்கூடாது. அவ்வாறு கொண்டு செல்லும் பட்சத்தில் அந்த பணத்துக்கான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். ஆவணங்கள் இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றனர். 

மேலும் செய்திகள்