தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது: சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்

உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2022-01-27 17:42 GMT
நாகர்கோவில், 
உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
சுவர் விளம்பரங்கள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. முன்னதாக உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியினர் அனைத்து இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டி இருந்தனர். பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களும் செய்யப்பட்டு இருந்தது.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் மாநகர், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக அனைத்து பகுதிகளிலும் சுவர்களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை முழுமையாக அழிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கலெக்டர் அலுவலகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், தேசிய நெடுஞ்சாலை பகுதிகள், மாநகராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் உள்ளாட்சி பணியாளர்கள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மூலம் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி நடைபெற்றது. சுவரொட்டிகளையும் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டது.
51 பேரூராட்சி
நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்த வரையில் கோட்டார், வடசேரி, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், மணிமேடை, வேப்பமூடு, செட்டிகுளம், பீச்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அப்புறப்படுத்தினர். சுவர் விளம்பரங்களும் அளிக்கப்பட்டது.
இதே போல் 51 பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் சுவர் விளம்பரங்களை அளிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை மற்றும் கொல்லங்கோடு ஆகிய நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்