சாலை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

சாலை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-27 19:45 GMT
பெரம்பலூர்:

தர்ணா போராட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பழனிசாமி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன், ஊரக வளர்ச்சி துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு போராட்டத்தை தூண்டியதாக கோட்ட பொறியாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
கோரிக்கைகள்
மேலும் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு உரிய தளவாடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களை தொலைதூர பணிக்கு பயன்படுத்தும்போது பயண செலவு தொகை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் முதுநிலைப்பட்டியலை 35-35ஏ அடிப்படையில் வெளியிட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு சாலை ஆய்வாளர் நிலை 2 பதவி உயர்வு, அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணிமாற்றம் செய்து உத்தரவு வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை மாற்று பணிக்கு பயன்படுத்தக்கூடாது. பொது சேமநல நிதி கணக்கில் முன்பணம் பெற 3 மாதங்களுக்கு மேல் காத்துக்கிடக்கும் அவலம், கையூட்டு கேட்டு நிர்பந்தம் செய்யும் கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சாலை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். சாலை பணியாளர்களில் சிலர் தங்களது குடும்பத்தினருடன் தர்ணாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தர்ணாவில் ஈடுபட்ட சாலை பணியாளர்கள் போராட்ட களத்தில் மதிய உணவாக தக்காளி சாதம் சமைத்து சாப்பிட்டனர்.
பேச்சுவார்த்தையில் உறுதி
இதையடுத்து மாலையில் கோட்ட பொறியாளர் சாபுதீன், தர்ணாவில் ஈடுபட்ட சாலை பணியாளர்களின் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்