சமூக வலைத்தளத்தில் வீடியோ அனுப்பி விட்டு தூக்கில் தொங்கிய விவசாயி

இரவல் வாங்கிய 23 பவுன் நகையை திருப்பி தராததால் விரக்தி அடைந்த விவசாயி சமூக வலைத்தளத்தில் வீடியோ அனுப்பி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமான பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-01-27 20:16 GMT
உசிலம்பட்டி, 

இரவல் வாங்கிய 23 பவுன் நகையை திருப்பி தராததால் விரக்தி அடைந்த விவசாயி சமூக வலைத்தளத்தில் வீடியோ அனுப்பி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமான பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

விவசாயி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 38). விவசாயி. இவருடைய மனைவி சிமிக்கலா. அதே ஊரை சேர்ந்த ஜெயபால் மனைவி சோனியாகாந்தி(35).
இந்த நிலையில் சோனியாகாந்தி, தனது உறவினரான சிமிக்கலாவிடம், தான் ஒரு விசேஷத்துக்கு செல்வதாகவும், உன்னிடம் இருக்கும் நகையை இரவல் கொடு, விசேஷம் முடிந்ததும் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறி இருக்கிறார். இதை நம்பிய சிமிக்கலா தன்னிடம் இருந்த 23 பவுன் நகைகளை, அவரிடம் கொடுத்தார்.

நகைைய திருப்பி கொடுக்க மறுப்பு

விசேஷம் முடிந்த பிறகும் ேசானியாகாந்தி இரவல் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை. இது பற்றி ஆறுமுகம் கேட்ட போது, தான் அந்த நகைகளை அடகு வைத்து விட்டேன். அந்த நகைகளை திருப்ப ரூ.70 ஆயிரம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்தால் திருப்பி தந்து விடுகிறேன் என்று சோனியாகாந்தி கூறி இருக்கிறார்.
இதை நம்பி, தன்னுடைய நகைகளை திருப்பினால் போதும் என்று நினைத்து ஆறுமுகம் ரூ.70 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து உள்ளார். அந்த பணத்தை பெற்று கொண்ட பின்னரும் சோனியாகாந்தி நகைைய திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

பலமுறை தனது மனைவி நகைகளை திருப்பி தருமாறு கேட்டும் அவர் திருப்பி கொடுக்காததால் ஆறுமுகம் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று ஆறுமுகம், செல்போனில் வீடியோ பதிவு செய்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் நேற்று வைரலாக பரவியது. அதில் “என் சாவுக்கு என்னையும் என் மனைவியும் ஏமாற்றி நகைகளையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு தர மறுத்து வரும் சோனியா காந்திதான் காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வாலாந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தலைமறைவு

இதற்கிடையே ஆறுமுகம் வீடியோ அனுப்பி தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் சோனியாகாந்தி தலைமறைவாகி விட்டார். அவர் அதே ஊரில் பலரிடம் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து இருப்பதாகவும், தங்க நகைகளை வாங்கி அடகு வைத்து வட்டி தொழில் செய்து வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்