படப்பை அருகே வாகனம் மோதி 10 மாடுகள் சாவு

படப்பை அருகே வாகனம் மோதி 10 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

Update: 2022-01-28 13:52 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழிப்பாதை சாலைகளில் முக்கிய சாலையாக வண்டலூர்-வாலாஜாபாத் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த நிலையில் நேற்று காலை படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி வஞ்சூவாஞ்சேரி பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் படுத்தும் நின்று கொண்டும் இருந்தன.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கனரக வாகனம் சாலையில் இருந்த மாடுகளின் மீது மோதி விட்டு சென்றது. இதில் 10 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

இதனால் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் இந்த வழியாக வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், போலீஸ்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்