நசரத்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
நசரத்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). லாரி டிரைவர். இவர் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, நசரத்பேட்டை அருகே லாரியை நிறுத்திவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்கு ஆட்டோவில் வந்த 3 பேர் முத்துக்குமாரை தாக்கி அவரிடம் இருந்து பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். வழிப்பறியில் ஈடுபட்டது அம்பத்தூர் சண்முகாபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (21), வடிவேல் (28), சிவா (22) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்டால் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்பதற்காக சரக்கு ஆட்டோவில் கும்பலாக வந்து ஆங்காங்கே நின்று கொண்டு தனியாக நடந்து செல்பவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் சரக்கு ஆட்டோ கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இரவு நேரங்களில் நடக்கும் வழிப்பறி சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்கள் நூதன முறைகளை கையாண்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.