நாகையில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நாகையில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. வேட்பு மனு தாக்கல் தொடங்கியதால் நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-01-28 15:54 GMT
நாகப்பட்டினம்:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நாகையில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. வேட்பு மனு தாக்கல் தொடங்கியதால் நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம்(பிப்ரவரி) 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. நாகை நகராட்சியில்  36 வார்டுகள் உள்ளன. வேட்பு மனுக்கள் பெறப்படும் இடங்களை நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீதேவி தேர்வு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனு தாக்கல் தொடங்கியதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்பேரில், நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
சுவர் விளம்பரங்கள் அழிப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் நகராட்சி எல்லையில் உள்ள சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள்  அழிக்கப்பட்டு வருகிறது
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதேவி கூறியதாவது:-
நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில்  17-வது வார்டு ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கும், 10, 21 ஆகிய 2 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வார்டு 1, 2, 4, 6, 11, 14, 15, 18, 19, 20, 23, 27, 28, 29, 31, 32 ஆகிய 16 வார்டுகள் பெண்கள் பொதுபிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
வார்டு எண் 3, 5, 7, 8, 9, 12, 13, 16, 22, 24, 25, 26, 30, 33, 34, 35, 36 ஆகிய 17 வார்டுகள் பொதுபிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். வருகிற 4-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை பெற 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள்
 1 முதல் 9 வார்டுகள் வரை உள்ளவர்கள் நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணனிடமும், 10 முதல் 18 வரையிலான  வார்டுகளுக்கு நகராட்சி பொதுபிரிவு அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிகண்டனிடமும், 19 முதல் 27 வரையிலான வார்டுகளுக்கு நகர்நல அலுவலர் அறையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணியனிடமும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
28 முதல் 36 வரையிலான வார்டுகளுக்கு நகராட்சி அலுவலகம் சமுதாய கூட அறையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜிடம் வேட்பு மனுக்களை தாக்கால் செய்யலாம். 
கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு
இதையொட்டி நகராட்சி அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.தேர்தல் நடத்தை விதிமுறை அமல் படுத்தப்பட்டுள்ளதால் நகராட்சி எல்லையில் உள்ள சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவை அழிக்கப்பட்டு வருகிறது
 சுழற்சி முறையில் 8 மணி நேரத்திற்கு ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  நகர எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 22-ந்தேதி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மார்ச் மாதம் 4- ந்தேதி தலைவர், துணைதலைவர் ஆகியோருக்கு மறைமுக தேர்தல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்