கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு கொரோனா

கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update:2022-01-28 21:47 IST
கோவை

கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தடுப்பூசி

கோவையில் கொரோனா தொற்று 3-வது அலை வேகமாக உள்ளது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 100-க்கும் கீழே இருந்தது. தற்போது தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதை தடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையொட்டி 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி, மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கொடிசியா, இ.எஸ்.ஐ. உள்ளிட்ட இடங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 

கலெக்டருக்கு கொரோனா 

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு  காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டது. 

இதைத் தொடர்ந்து கலெக்டர் சமீரன் ரேஸ்கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இந்த நிலையில் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற பின்னர் கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் சற்று கலக்கம் அடைந்து உள்ளனர். 

இதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நீலகிரி கலெக்டர் அம்ரித் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்