விசைத்தறி உரிமையாளர்கள் 30 ந் தேதி ஆர்ப்பாட்டம்
கோவையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விசைத்தறி உரிமையாளர்கள் 30-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.;
கருமத்தம்பட்டி
கோவையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விசைத்தறி உரிமையாளர்கள் 30-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வேலைநிறுத்த போராட்டம்
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இங்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு வழங்க வில்லை. கடந்த டிசம்பர் மாதம் முதல் புதிய கூலி உயர்வு அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூலி உயர்வு வழங்கவில்லை. இதையடுத்து கடந்த 9-ந் தேதி முதல் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்த நிலையில் கடந்த வாரத்தில் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. அது தோல்வியில் முடிந்தது. இதை யடுத்து கோவையில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் 2-வது பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சு வார்த்தையில், நூல் விலை உயர்வு மற்றும் தொழில் மந்த நிலை காரணமாக புதிய கூலி உயர்வை தற்போது வழங்க இயலாது என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஆலோசனை கூட்டம்
இதை தொடர்ந்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து சோமனூர் சங்க அலுவலகத்தில் கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
சோமனூர் சங்கத் தலைவர் சி.பழனிச்சாமி தலைமை தாங்கி னார். பல்லடம் சங்க செயலர் வேலுச்சாமி முன்னிலை வகித் தார். இதில் விசைத்தறி தொழில், தொழிலாளர் நலன் மற்றும் புதிய கூலி உயர்வின் தேவை குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
30-ந் தேதி ஆர்ப்பாட்டம்
அரசு அறிவித்த புதிய கூலி உயர்வை உடனடியாக அமல்படுத்தக் கோரி வருகிற 30-ந் தேதி திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது,
தொடர்ந்து வருகிற 2-ந் தேதி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை பதிவு செய்வது, நூல் விலை உயர்வை காரணம் காட்டி அரசு அறிவித்த புதிய கூலி உயர்வு வழங்க மறுத்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.