திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

Update: 2022-01-28 18:14 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்காக நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

அப்போது நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கும் மற்றும் 200 மீட்டர் தொலைவிற்கும் சாலையில் வெள்ளை வண்ணம் தீட்டி அடையாளம் செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

வழிகாட்டு நெறிமுறைகள்

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பதிவேடுகளையும், நகராட்சி அலுவலகங்களில் அமைக்கபட்டுள்ள கண்காணிப்பு ஒளிப்பரப்பு காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதுகாப்பு பணிகள் குறித்தும் போலீசாரிடம் விவரங்களை கேட்டறிந்தனர். கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளியை பின்பற்றியும், கையுறை, முககவசம் ஆகியவற்றை அனைவரும் பின்பற்றி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், நகராட்சி பொறியாளர் சங்கர், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உடனிருந்தனர்.

ஜோலார்பேட்டை

அதேபோன்று ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பதிவேடுகள், கண்காணிப்பு ஒளிபரப்பு காட்சிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்பாது  ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி, நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார், நகராட்சி பொறியாளர் கோபு மற்றும் பலர் உடனிருந்தனர்.

ஆம்பூர்

ஆம்பூர் நகராட்சி அலுவலகத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதேபோல் திருப்பத்தூர் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனும் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்