வால்பாறையில் பள்ளிக்கூட சத்துணவு அறையில் எலும்புக்கூடாக கிடந்த குட்டி யானை
வால்பாறையில் பள்ளிக்கூட சத்துணவு அறையில் எலும்புக்கூடாக குட்டி யானை கிடந்தது.;
வால்பாறை
வால்பாறையில் பள்ளிக்கூட சத்துணவு அறையில் எலும்புக்கூடாக குட்டி யானை கிடந்தது.
எலும்புக்கூடாக குட்டி யானை
வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் பகுதிக்கும் வாகமலை எஸ்டேட் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஹைபாரஸ்ட் எஸ்டேட் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் பள்ளிக்கூடம் யானைகள் வழித்தடத்தில் அமைந்திருந்ததால் பலமுறை இந்த பள்ளி கட்டிடத்தையும், சத்துணவு மையத்தையும் காட்டு யானைகள் தொடர்ந்து இடித்து சேதப்படுத்தியது. இதனால் ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் இருந்த பள்ளிக்கூடத்தை மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி வாகமலை எஸ்டேட் பகுதிக்கு பள்ளி நிர்வாகம் மாற்றி விட்டது. இந்த பள்ளி கட்டிடம் வாக்கு சாவடியாக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடிகள் தயார்படுத்தும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நகராட்சி பணியாளர்கள் வாக்குச்சாவடி பராமரிப்பு பணிக்கு சென்ற போது பயனற்ற நிலையில் யானைகள் உடைத்து சேதப்படுத்தியிருந்த சத்துணவு மையத்தின் கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் உள்ளே பார்த்த போது இறந்த நிலையில் எலும்புக்கூடாக குட்டி யானை ஒன்று கிடந்தது.
எரியூட்டப்பட்டது
இதுகுறித்து மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு எஸ்டேட் நிர்வாகமும் நகராட்சி பணியாளர்களும் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆனைமலை உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் வனக் கால்நடை அலுவலர் டாக்டர் சுகுமார் இறந்து எலும்புக்கூடாக கிடந்த குட்டியானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இறந்த நிலையில் கிடந்தது 8 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டியானை. பள்ளிக்கூட சத்துணவு மையத்திற்குள் நுழைந்த போது கதவு அடைத்துக் கொண்டதால் குட்டியானை மீண்டும் வெளியே வரமுடியாத நிலையில் இருந்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்னால் குட்டி யானை இறந்துள்ளது. பிரேத பரிசோதனை செய்து குட்டியானையின் உடல் உறுப்புகள் எரிக்கப்பட்டது. என்றார்.