வேட்புமனு தாக்கல் வீடியோ மூலம் கண்காணிப்பு

கிணத்துக்கடவு பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல் வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.;

Update:2022-01-29 18:55 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல் வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

வீடியோ மூலம் கண்காணிப்பு

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 28-ந் தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கிணத்துக்கடவு பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. 
15 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 4,098 பேரும், பெண் வாக்காளர் 4,422 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8,521 வாக்காளர்கள் உள்ளனர். 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் 2 உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
வேட்புமனுக்கள் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து பெறப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் அனைவரும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், போலீசார் வீடியோ கேமராக்கள் மூலம் காட்சிகள் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

சுயேட்சை வேட்பாளர் 

இதற்கென பேரூராட்சி அலுவலகத்தில் 5 நவீன கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்படும் வேட்பாளர் மற்றும் அவருடன் வரும் நபர்களுக்கு வெப்ப பரிசோதனை, கிருமிநாசினி கொடுக்கப்பட்ட பின்னர், முககவசம் அணிந்து வேட்புமனு தாக்கலுக்கு பேரூராட்சி அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர். 
மேலும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக கிணத்துக்கடவு பேரூராட்சி மன்ற அலுவலக வளாகப் பகுதியில் கிணத்துகடவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2-ம் நாள் வேட்புமனுத்தாக்கல் செய்த 13- வது வார்டில் போட்டியிட பத்மநாபன் என்ற சுயேட்சை வேட்பாளர் மட்டும் வந்தார்.அவர் கிணத்துகடவு பேரூராட்சி உதவி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அரசியல் கட்சியினர் யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 

மேலும் செய்திகள்