‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-01-29 16:06 GMT
சாலையை ஆக்கிரமிக்கும் குப்பைகள் 

வத்தலக்குண்டு கடைவீதி பகுதியில் சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் சாலை முழுவதும் குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீனிவாசன், வத்தலக்குண்டு.

தண்ணீர் தொட்டி சீரமைக்கப்படுமா? 

வேடசந்தூர் தாலுகா இ.சித்தூர் ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பொருத்தப்பட்ட குழாயின் வால்வு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்தது. இதனால் தொட்டியில் நிரப்பப்படும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. 

தற்போது வரை வால்வு சீரமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தண்ணீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், நல்லமநாயக்கன்பட்டி.

குப்பையால் நோய் பரவும் அபாயம்

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு குப்பைகள் கொட்டப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி பள்ளி திறக்கப்பட்டதும் ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள். 

பள்ளி முன்பு குவிந்து கிடக்கும் குப்பைகளால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரோஜா பிரியன், வேடசந்தூர்.
----------

மேலும் செய்திகள்