மகனை மீட்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் சென்ற மகனை மீட்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

Update: 2022-01-29 19:37 GMT
மதுரை, 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஜெயபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் ஜெயராஜை, சிலர் பிடித்து வைத்துள்ளனர். அவரை மீட்டு ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘‘மனுதாரரின் மகன் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதற்கிடையே, அவருக்கு கடந்த மே மாதம் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 5 மாதத்தில் மனைவியை விட்டு பிரிந்து, ஏற்கனவே தொடர்பில் இருந்த பெண்ணுடன் சென்றுவிட்டார். இது தெரிந்தும் மனுதாரர் தனது மகனை ஆஜர்படுத்தக்கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் மகன் தனது சொந்த விருப்பத்தின்பேரில்தான் சென்று தங்கி இருந்துள்ளார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். இந்த தொகையை காவல்துறை நல நிதிக்கு மனுதாரர் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்