வேட்புமனு விண்ணப்பங்களை பெற தனியாக மையம்

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு விண்ணப்பங்களை பெறுவதற்காக தனியாக மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.

Update: 2022-01-29 20:12 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு விண்ணப்பங்களை பெறுவதற்காக தனியாக மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
தஞ்சை மாநகராட்சி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 4-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம்.
தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த 51 வார்டுகளிலும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை பெறுவதற்காக தனித்தனியே அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 வார்டுகளுக்கு ஒரு அதிகாரி என்ற விகிதத்தில் வேட்புமனுக்களை பெறுவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வேட்புமனுக்களை வாங்கி வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு அதிகாரிகளின் அறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தனியாக மையம்
வேட்புமனு விண்ணப்பங்களை வாங்குவதற்காக தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தனியாக மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் வேட்புமனு விண்ணப்பங்களை பெறுபவர்கள் தாங்கள் எந்த வார்டு பகுதியில் போட்டியிட விரும்புகிறார் என்ற விவரத்தை எழுதிக்கொடுத்து வேட்புமனு விண்ணப்பங்களை பெற்று செல்கிறார்கள். விண்ணப்பங்கள் ரூ.1 அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வேட்பாளர்கள்  மாநகராட்சிக்கு குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் பாக்கி இல்லை என்றும், மேலும் மாநகராட்சிக்கு எந்த வகையிலும் இழப்பு ஏற்படுத்த வில்லை என்ற வகையிலும் தடையில்லா சான்று பெறுவதற்கு விண்ணப்பித்து அதனையும் பெற்று வருகிறார்கள்.
அரசியல் கட்சியினர் குவிந்தனர்
இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக விண்ணப்பங்களை பெறுவதற்காக நேற்று அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். இதேபோன்று சுயேச்சையாக போட்டியிட விரும்புபவர்களும் விண்ணப்பங்களை அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடம் பரபரப்பாக காணப்பட்டது. கடந்த 27-ந் தேதி யாரும் வேட்பு மனு விண்ணப்பங்கள் வாங்காத நிலையில் 28-ந் தேதி மட்டும் 134 பேர் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். நேற்று அதிக அளவில் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுவதையொட்டி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்