முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக நூதன மோசடி

பெங்களூருவில், முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ஏராளமானோரிடம் பல லட்சத்தை வசூலித்து சுருட்டிக்கொண்டு தலைமறைவான தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-29 21:36 GMT
பெங்களூரு: பெங்களூருவில், முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ஏராளமானோரிடம் பல லட்சத்தை வசூலித்து சுருட்டிக்கொண்டு தலைமறைவான தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர் கடத்தல்

பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் தொழில் அதிபர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு(2021) அக்டோபர் மாதம் அந்த பெண் தொழில் அதிபரின் கார் டிரைவரை சிலர் கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் ரூ.10 லட்சம் பெற்று கொண்டு கார் டிரைவர் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கார் டிரைவரை கடத்தியதாக தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நடராஜ், சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பெங்களூரு பானசாவடியை சேர்ந்த ராகேஷ், பாலாஜி ஆகிய 4 பேரை அம்ருதஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையும் நடந்து வந்தது. இந்த நிலையில் கைதான 4 பேரின் செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது செல்போன்களில் சில வீடியோக்களில் கத்தை, கத்தையாக பணம் இருந்தது.

கிடுக்கிப்பிடி விசாரணை

இதுகுறித்து கைதான 4 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். ஆனால் 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொன்னதால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது 4 பேரும் சேர்ந்து கள்ள நோட்டுகளை தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரூ.20 கோடி மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.5.85 லட்சம் ரொக்கம், 4 போலி தங்க மோதிரங்கள், 10 போலி தங்கக்கட்டிகள், ஒரு தங்க வளையல், 2 மோதிரங்கள், 2 கார்கள், 14 செல்போன்கள், ஒரு ஸ்கூட்டர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதாவது கைதான 4 பேரும் சேர்ந்து ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2 ஆயிரம் போலி ரூபாய் நோட்டுகளை தயாரித்து கத்தை, கத்தையாக அடுக்கி வைத்து உள்ளனர். பின்னர் அந்த கள்ளநோட்டுகளை வீடியோ எடுத்து தங்களிடம் அதிக பணம் உள்ளது என்றும், தங்களிடம் முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவோம் என்றும் கூறி விளம்பரம் செய்துள்ளனர்.

மோசடி

இதனை நம்பிய ஏராளமானோர் 4 பேரிடமும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அதை இரட்டிப்பாக்கி தரும்படி கேட்டு உள்ளனர். ஆனால் 4 பேரும் தாங்கள் வசூலித்த பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். மேலும் 4 பேரும் தயாரித்த கள்ள ரூபாய் நோட்டுகளில் இந்த ரூபாய் நோட்டுகள் திரைப்பட படப்பிடிப்புக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்றும் எழுதி உள்ளனர்.

ஆனால் அந்த வாசகம் தெரியாதபடி ரூபாய் நோட்டுகளை வீடியோ எடுத்து அதன்மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்து வந்ததும் அம்பலமாகி உள்ளது. கைதான 4 பேர் மீதும் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்