செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-01-30 11:04 GMT
ஆலோசனை கூட்டம்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராகுல்நாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பேசும்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடும் நடவடிக்கை

அனைத்து பதற்றமான வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும் மேலும் தேர்தல் முடிவுகள் விரைவாக வெளியிடப்படும், அரசியல் கட்சி பிரமுகர்கள், சுயேச்சைகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க, பா.ஜ.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்