காஞ்சீபுரம் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்

காஞ்சீபுரம் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.;

Update:2022-01-30 17:04 IST
காஞ்சீபுரம்-உத்திரமேரூர் நெடுஞ்சாலை பகுதியில் செய்யாறு பாய்ந்து செல்கிறது. செய்யாற்றின் குறுக்கே வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட மாகரல் பகுதியையும், உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட வெங்கச்சேரி பகுதியையும் இணைக்கும் வகையில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்த நிலையில், தற்காலிகமாக சேதம் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக மாகரல் - வெங்கச்சேரி இடையிலான தரைப்பாலம் முழுவதுமாக சேதமடைந்தது. இதன் காரணமாக காஞ்சீபுரம்- உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் ஒரு மாத காலத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சீபுரம் - உத்திரமேரூர் பகுதிக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளானார்கள். மழை ஓய்ந்த பின்பு இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பஸ்கள், லாரிகள், அனுமதிக்கப்படாமல், போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் தரைப்பாலத்தில் சேதம் ஏற்படுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என மாகரல் மற்றும் காஞ்சீபுரம் உத்திரமேரூர் நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமங்களை சேர்ந்த மக்களும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தரும் நீண்ட காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

உத்திரமேரூர் எம்.எல்.ஏ. மற்றும் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ.20 கோடி மதிப்பீட்டில் மாகரல் பகுதியையும், வெங்கச்சேரி பகுதியையும், இணைக்கும் படி செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாகரல் பகுதியில் இருந்து வெங்கசேரி பகுதிக்கு 600 மீட்டர் நீளத்திற்கு செய்யாற்றின் குறுக்கே 11 தூண்கள் அமைத்து 12 தளங்களுடன் 15 மீட்டர் அகலம் கொண்ட அளவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை மாகரல் பகுதி கிராம மக்கள் முன்னிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரரும், ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

மேலும் செய்திகள்