அக்னி கலசத்தை 6ந் தேதிக்குள் மீண்டும் வைக்க வேண்டும்

திருவண்ணாமலையை அடுத்த நாயுடுமங்கலத்தில் அகற்றப்பட்ட அக்னி கலசத்தை 6ந் தேதிக்குள் மீண்டும் வைக்க வேண்டும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி கூறினார்.

Update: 2022-01-30 12:25 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையை அடுத்த நாயுடுமங்கலத்தில் அகற்றப்பட்ட அக்னி கலசத்தை 6-ந் தேதிக்குள் மீண்டும் வைக்க வேண்டும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி கூறினார்.

அக்னி கலசம் அகற்றம்

திருவண்ணாமலையை அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் அவர்களது அடையாள சின்னமாக விளங்கும் அக்னி கலசம் அமைக்கப்பட்டு இருந்தது.

 சாலை விரிவாக்கத்திற்காகவும், பயணியர் நிழற்குடை அமைப்பதற்காகவும் அக்னி கலசம் அகற்றப்பட்டு பயணியர் நிழற்குடை கட்டி முடித்தபின் அதன் அருகில் அமைக்கப்பட்டது. 

இதனை அகற்ற வேண்டுமென்று மற்றொரு கட்சியினர் புகார் தெரிவித்ததன் பேரில் அதனை அகற்றும்படி அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. 

அதை தொடர்ந்து கடந்த 26-ந் தேதி இரவோடு இரவாக அந்த அக்னி கலசத்தை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் அகற்றினர். 

இதனை கண்டித்து மறுநாள் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பு.தா.அருள்மொழி பார்வையிட்டார்

இந்த நிலையில் இன்று நாயுடுமங்கலத்தில் அக்னி கலசம் அகற்றப்பட்ட இடத்தை வன்னியர் சங்க மாநில தலைர் பு.தா.அருள்மொழி நேரில் வந்து பார்வையிட்டார். 

முன்னதாக அவரது தலைமையில் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக நாயுடுமங்கலத்திற்கு சென்றனர். 

இதனை முன்னிட்டு வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

நாயுடு மங்கலத்தில் 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட வன்னியர் சமுதாய மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் பு.தா.அருள்மொழி பேசினார். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

6-ந் தேதிக்குள் வைக்க வேண்டும்

1989-ம் ஆண்டு இந்த இடத்தில் வன்னியர்களின் அடையாள சின்னமான அக்னி கலசத்தை டாக்டர் ராமதாஸ் நிறுவினார். 

சாலை விரிவாக்கம் மற்றும் பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக இந்த அக்னி கலசத்தை அகற்றி விட்டு மீண்டும் இந்த பகுதியில் அமைத்து தருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

நிழற்குடை அமைக்கப்பட்ட பிறகு மீண்டும் அந்த அக்னிகலசத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால் எந்தவித காரணமும் இல்லாமல் அதனை எடுத்து சென்று விட்டனர். இது ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்தை புண்படுத்துகின்ற செயலாக இருக்கின்றது.

அமைச்சரின் துண்டுதலின் பேரில் வருவாய் கோட்டாட்சியரும், கலெக்டரின் நேர்முக உதவியாளரும் தான் இதனை செய்து உள்ளனர். 

தமிழக அரசு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் வருகிற 6-ந் தேதிக்குள் அக்னி கலசத்தை மீண்டும் வைக்க வேண்டும். நாங்கள் இந்த கோரிக்கை காந்தியின் வழியில் வைக்கின்றோம். 

இதை நீங்கள் செய்யவில்லை என்றால் எங்கள் இளைஞர்கள் கோட்சேவாக மாறினால் எங்கள் மீது பழி செல்ல கூடாது. அத்துமீறி இந்த காரியத்தை செய்து உள்ளனர். 

இடஒதுக்கீடு ரத்து ஏற்புடையதல்ல

நாங்கள் அமைதியாக இருப்போம். எங்கள் விவகாரத்தில் அத்துமீறி நடந்தால் அவர்களை அடக்குவோம். எங்கள் உரிமையை நிலை நாட்ட நாங்கள் எந்தவிதத்திலும் சமாதானமாகமாட்டோம். 

அந்த அக்னி கலசத்தை வைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது அது ஒரு மாதிரியாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கே இல்லை. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசு வழங்கியது. தற்போது அதை ரத்து செய்து விட்டனர். இதன் தாக்கம் நிச்சயமாக தமிழகத்தில் எதிரொலிக்கும்.

இதுவரைக்கும் தனிப்பட்ட சாதிக்கு கொடுத்த இடஒதுக்கீட்டை யாரும் ரத்து செய்யவில்லை. வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்டது மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

இது ஏற்புடையது அல்ல. விரைவில் வன்னியர் ஒருவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுவார். அதற்கான நிலையை சங்கம் எடுத்து உள்ளது.

 இவ்வாறு அவர் கூறினார். 

பஸ் கண்ணாடி உடைப்பு

பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார், முன்னாள் எம்.பி. துரை, முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் பக்தவசலம், பாண்டியன், வேலாயும் உள்பட பலர் உடனிருந்தனர். 

முன்னதாக நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் வந்த அரசு பஸ்சின் கண்ணாடியை சிலர் கல்லால் தாக்கினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

மேலும் செய்திகள்