அச்சரப்பாக்கம் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவத்தில் 8 பேர் கைது

அச்சரப்பாக்கம் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்தனர்.;

Update:2022-01-30 18:47 IST
நகை-பணம் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள கடமலை புத்தூரில் கடந்த வாரம் 13-ந் தேதி அதிகாலை கஜவர்தன்-ஜெகதா தம்பதியினரை கட்டிப்போட்டு 20 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் ஐ.ஜி.சந்தோஷ் குமார் உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.சத்யபிரியா, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில், மதுராந்தகம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரத் தலைமையில், அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சூணாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

மடக்கி பிடித்தனர்

இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் கர்நாடகா தப்பிச்செல்ல முயல்வதாக அறிந்து செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையின் போது 8 பேர் கொண்ட முகமூடி அணிந்த கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் வந்த சொகுசு காரை கைப்பற்றிய போலீசார் விசாரித்ததில், மேலும் இவர்கள் மீது பல கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் மேலும் பல இடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டு செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் சுற்றியதும் தெரியவந்தது.

8 பேர் கைது

இதைத்தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் (39), பிரபு (31), சசிகுமார் (36) முகமது அப்துல்லா (23), அருள் முருகன் (36), ராஜா (30) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (39), கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் (32) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்தனர். அவர்களிடம் இருந்த வெள்ளி, தங்க கட்டிகளையும் கைப்பற்றிய போலீசார், 8 பேரையும் நேற்று இரவு மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்