வனத்துறை வாகனகண்ணாடியை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

வனத்துறை வாகனகண்ணாடியை உடைத்து காட்டு யானை அட்டகாசம்;

Update:2022-01-30 20:15 IST
வனத்துறை வாகனகண்ணாடியை உடைத்து காட்டு யானை அட்டகாசம்
வால்பாறை


வால்பாறையில் கோடைகாலம் தொடங்கி கடுமையான வெயில் நிலவுகிறது. இதனால் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் முகாமிட்டிருந்த பெரும்பாலான காட்டு யானைகள் கூட்டம் வெயிலின் தாக்கம் காரணமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வருகின்றது. 

இந்த நிலையில் அதிக நீராதாரங்களை கொண்ட சிங்கோனா, நீரார், சின்னக்கல்லார், பத்தாம்பாத்தி ஆகிய எஸ்டேட் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு இரவில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஒரு குட்டியானை உட்பட 4 யானைகள் கொண்ட கூட்டம் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இரவில் சிங்கோனா பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைவதற்கு முயன்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு10.30 மணியளவில் சிங்கோனா இரண்டாவது பிரிவு குடியிருப்புக்கு அருகே சின்னக்கல்லார் செல்லும் வழியில் நடந்து வந்த 4 காட்டு யானைகளும் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைவதற்கு முயற்சித்துள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் வனத்துறையின் வாகனத்தில் வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தில் இருந்த சைரனை ஒலிக்கச் செய்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 3 யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்ட நிலையில் ஒரு  யானை மட்டும் வனத்துறையின் வாகனத்தை எதிர்த்து துரத்தி வந்து வனத்துறையினரின் பாதுகாப்பு ரோந்து வாகனத்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. 
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

மேலும் செய்திகள்