வால்பாறை
கடந்த 3 வார ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா தாக்கம் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்ததால் சந்தை நாளாக விளங்கும் வால்பாறை பகுதியில் கடந்த 3 வார ஞாயிற்றுக்கிழமைகளிலும் வியாபாரம் பாதிக்கப்பட்டு பெரியளவிலான தொழில் முடக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் வால்பாறை பகுதி வியாபாரிகள் எஸ்டேட் பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வால்பாறையில் கொரோனாவின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் வால்பாறையில் 139 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வால்பாறையின் முக்கிய நாளாக விளங்கும் ஞாயிற்றுக்கிழமை நேற்று வால்பாறையில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் நகராட்சி மார்க்கெட் பகுதியில் நேற்று குறைவான மக்கள் கூட்டமே இருந்தது.
சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு விட்டாலும் நேற்று வால்பாறைக்கு குறைந்தளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். வால்பாறையில் கடுமையான வெயில் வாட்டி வருவதால் வால்பாறைக்கு வந்திருந்த குறைந்தளவிலான சுற்றுலா பயணிகளும் குறைந்தளவே தண்ணீர் இருந்த கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.