மரத்தில் ஏறி மாணவர்கள் போராட்டம்

மாநகராட்சி பள்ளியில் குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-01-30 16:46 GMT
கோவை

மாநகராட்சி பள்ளியில் குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்கள்.

பள்ளி மைதானத்தில் குடிநீர் தொட்டி

கோவை மாநகராட்சியில் சூயஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு தொடக்கத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், மாநகராட்சி பகுதிக ளில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பள்ளி மைதானத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டன. இதையடுத்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு தொட்டி கட்டும் பணி தொடங்கியது.

போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்தனர். ஆனாலும் பள்ளி மைதானத்தில் குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை பள்ளி மாணவர்கள், இந்திய மாணவர் சங்க நிர்வாகி தினேஷ் மற்றும் பொதுமக்கள் பள்ளி மைதானத்தில் திரண்டனர். அவர்கள், குடிநீர் தொட்டி கட்டும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை

அப்போது மாணவர்கள் சிலர் திடீரென்று மரத்தில் ஏறி போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் கோவை வடக்கு தொகுதி அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. மற்றும் போத்தனூர் உதவி கமிஷனர் சதீஷ் குமார், ராமநாத புரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், மாநகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்ற மாணவர்கள் கலைந்து சென்றனர். 

இதையொட்டி பள்ளிக்கூட நுழைவுவாசல் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்