சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கூறி உறுதிமொழி ஏற்க அனுமதி மறுப்பு
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி கோவையில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கூறி உறுதிமொழி ஏற்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஜி.ராமகிருஷ்ணன் வாக்குவாதம் செய்தார்.;
கோவை
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி கோவையில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கூறி உறுதிமொழி ஏற்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஜி.ராமகிருஷ்ணன் வாக்குவாதம் செய்தார்.
காந்தி நினைவு தினம்
மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோவை சிவானந்தா காலனி பகுதியில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பத்ம நாபன், விடுதலை சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடும் வாக்குவாதம்
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அங்கு வந்த கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சுகுமார், ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா மற்றும் போலீசார் அங்கு அனுமதி பெறாததால் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று கூறினார்கள்.
இதனால் போலீசாருக்கும், அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அத்துடன் அந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் சர்ச்சைக்குரிய வார்த்தை இடம்பெற்று இருந்தது.
அதை நீக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். அதை ஏற்று அந்த வார்த்தையை நிர்வாகிகள் நீக்கினார்கள். அதைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
மீண்டும் தடுத்தனர்
இந்த நிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு இருந்தபோது சர்ச்சைக்குரிய சில வார்த்தைகள் கூறப்பட்டது. உடனே போலீ சார் குறுக்கிட்டு அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று கூறி மீண்டும் தடுத்தனர்.
இதையடுத்து மீண்டும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி முடிவடைந்தது. பிறகு ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை அமல்படுத்த செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
இதனால்தான் டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக மற்றும் கேரள வாகனங்களுக்கு அனுமதி மறுத்தது. மேலும் காந்தியடிகளின் பாடல்களுக்கும் அனுமதி மறுக்கப் பட்டது.
நாங்கள் எந்த ஒரு மதத்தையும் சுட்டிக்காட்டவில்லை, கடந்த காலங்களில் நடந்ததை தான் கூறினோம் என்றார். இது தொடர்பாக கட்சி நிர்வாகி பத்மநாபன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.