ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் கோவையில் ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.;

Update:2022-01-30 22:45 IST
கோவை

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் கோவையில் ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

கூடுதல் தளர்வுகள்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஊரடங்கில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. அதுபோன்று வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆலயங்களில் பிரார்த்தனை 

இதை தொடர்ந்து கோவை ஈச்சனாரி மற்றும் புலியகுளம் விநாயகர், மருதமலை முருகன், தண்டுமாரியம்மன், கோனியம்மன் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

 இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்கப் பட்டன. இதன்படி டவுன்ஹால் புனித மைக்கேல் ஆலயம், நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணி யார் ஆலயம், காந்திபுரம் புனித பாத்திமா ஆலயம், அவினாசி சாலையில் உள்ள இம்மானுவேல் சி.எஸ்.ஐ. ஆலயம், திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல்சோல்ஸ் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

முகக்கவசம்

பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து இருந்தனர். முன்னதாக ஆலயங்களுக்கு வந்தவர்களுக்கு நுழைவு வாயிலில் கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசங்கள் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது.

 முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து அணிந்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு வந்தது மன நிம்மதியாக இருப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்