சின்னசேலம் அருகே போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

சின்னசேலம் அருகே வழிப்பாதை பிரச்சினையில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீரென போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-01-30 17:25 GMT
சின்னசேலம்

வழிப்பாதை பிரச்சினை

சின்னசேலம் அருகே ஈரியூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் அய்யாதுரை வயது(50). அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயப்பிரகாஷ்(48). இவர்கள் இருவருக்கும் இடையே ஊராட்சிக்குட்பட்ட கிராம சாலையில் வழிப்பதை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. 
இது பற்றிய தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாசின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சேலம்-விருத்தாசலம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சேலம்-விருத்தாசலம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வழிப்பாதை பிரச்சினையில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் போலீஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்